டெல்லி:
நிர்பயா, பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் நான் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருந்தாலும்கூட, அவர்கள் தப்பிப்பதற்கு இன்னும் ஒரு சட்ட வாய்ப்பு மட்டும் எஞ்சியுள்ளது. அதையும் குற்றவாளிகள் தரப்பு வக்கீல் கையில் எடுத்துள்ளார்.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்கார வழக்கில், நான்கு குற்றவாளிகளுக்கு வரும் 22ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் இன்று வாரண்டு பிறப்பித்துள்ளது.
இதற்கு பல தரப்பு மக்களும், பாதிக்கப்பட்ட தரப்பும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த வழக்கில் இப்போதாவது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா, என்றால் அதிலும் ஒரு சட்ட சிக்கல் எழுகிறது.
குற்றச்சாட்டு
குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞரான, ஏ.பி.சிங் நிருபர்களிடம் கூறுகையில், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் இந்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். மீடியாக்கள் மற்றும் பொதுமக்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் இந்த வழக்கில் மிகுந்த அழுத்தம் கொடுப்பதன் காரணமாக, வழக்கு பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மறு சீரய்வு மனு
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இப்போது மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறியுள்ளார் குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர். ஒருவேளை இந்த மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால் அது விசாரணையில் இருக்கும்போது குற்றவாளிகளை தூக்கிலிட முடியாது. எனவே நான்கு பேரையும் தூக்கிலிட கூடிய தேதி என்பது தள்ளிபோகும் வாய்ப்பு உள்ளது.