பீஜிங்: கொரோனா பாதிப்பு நம் வாழ்க்கையின் போக்கையே மாற்றி வருகிறது. நமது கை குலுக்கும் விதம் துவங்கி நமது பிள்ளைகள் பள்ளி செல்லும் போக்கு வரை அனைத்தும் மாறிவிட்டன.
உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் அனைவரும் கண்ணீர் மல்க கதறினாலும் சினிமா ஸ்டார்கள் கைகூப்பி வேண்டுகோள் வைத்தாலும் மருந்துவர்கள் நாளுக்கு நாள் போராடினாலும் கொரோனா தன் கோர முகத்தை காட்டியபடியே உள்ளது.
சீனாவில் வூஹான் மாகாணத்தில் விலங்கு இறைச்சி மூலம் பரவத் துவங்கிய கொரோனா மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சீனர்கள் உயிரை பலி வாங்கியது. தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடுகளில் ஒன்றான சீனா பல அதிநவீன வழிமுறைகளைக் கையாண்டு கொரோனா தாக்கத்தில் இருந்து சீனாவை விடுவித்தது.
இதில் சீனா கையாண்ட முக்கியமான தொழில்நுட்ப கருவி ட்ரோன். இதன்மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருந்துகள் தெளிக்க முடிவெடுத்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் காட்டியது. இதனால் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் முறை எவ்வாறு சாத்தியப்பட்டது எனப் பார்ப்போமா
சீனாவில் இதற்குமுன்னர் ட்ரோன்கள் விவசாய நிலங்களில் பூச்சி மருந்து தெளிக்கப் பயன்படுத்தப்பட்டன. அது ஏரியல் ஸ்பிரே எனப்படும். அதுவே தற்போது கொரோனாவைத் தடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா பரவ முக்கிய காரணம் இருமல், தும்மல் காரணமாக எச்சில் காற்றில் தெளிப்பதாகும். பாதிக்கப்பட்டவரது எச்சில், கபம் உள்ளிட்டவை பொது இடங்களில் உள்ள கதவு கைப்பிடிகளில் பட்டு அதனை மற்றொருவர் தொடும்போது பரவும். ட்ரோன் பொது இடங்களில் மருந்து தூவுவதால் இந்த பாதிப்பு கணிசமாகக் குறையும்.
சிலிண்டரில் நிரப்பப்பட்ட மருந்தை தூய்மை பணியாளர்கள் கைகளால் ஸ்பிரே செய்வதைவிட ட்ரோன் மூலம் பொது இடங்களில் ஸ்பிரே செய்வது 50 மடங்கு நல்ல பலனைத் தருமென எக்ஸ்.ஏ.ஜி ட்ரோன் நிறுவனத் தலைவர் ஜஸ்டின் கோங் தெரிவித்துள்ளார்.
ட்ரோன்களை சரியாகப் பயன்படுத்த சீனாவில் பல மாநகராட்சிகளின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. ட்ரோன்களை ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து மட்டுமே இயக்க முடியும். இதற்கான ஆப்ரேட்டர்கள் ஆங்காங்கு பணியமர்த்தப்பட்டனர். கைகளால் மருந்து தெளிப்பவர்களுக்கு மத்தியில் ட்ரோன் ஆப்பரேட்டர்களுக்கு பாதிப்பு கணிசமாகக் குறைகிறது.
தற்போது இந்தியாவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் கொரோனா மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இவற்றை சரியாகப் பயன்படுத்தினால் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பது உறுதி.